திராவிட இயக்க ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற மத்தியில் இருக்கும் பாஜக பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்துபார்க்கிறது.
கழகங்களற்ற அரசியல் என்கிற கோஷம், பிளவுண்ட அதிமுக, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் ஆகியவற்றை இதன் பகுதியாகவே பார்க்கலாம். இவற்றை எதிர்கொள்ளவேண்டிய பொறுப்பு திமுகவுக்கே உள்ளது.
புதிய அரசியல் போக்குகள், புதிய அரசியல் தலைமைகள், புதிய அரசியல் களம் ஆகியவற்றை அது தற்போது எதிர்கொள்கிறது. தன்னை அரசியல் களத்தில் இருந்து அகற்றுவதற்காகச் செய்யப்படும் சதிகளை அது எதிர்கொள்ள தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி.
திமுக மட்டும்தான் திராவிட இயக்கத்துக்கு நெருக்கமான வரலாற்று தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. அத்துடன் நிரூபிக்கப்பட்ட கொள்கைப்பதிவுகளையும் கொண்டது. இன்றைக்கு பாஜகவை எதிர்ப்பதாகச் சொல்லும் தினகரனோ கமலஹாசனோ நாளைக்கு பாஜக வை எதிர்ப்பார்கள் என்று சொல்ல இயலாது. ஆனால் பாஜகவுடன் அரசியல் கூட்டு ஒரு காலத்தில் வைத்திருந்தபோதிலும் பாஜகவுக்கு எதிரான கொள்கை உடையதாக திமுக மட்டுமே நிரூபிக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டுள்ளது.எனவே தற்போதைய அரசியல் சூழலை எதிர்கொள்ள திமுக தன் கடந்த கால வரலாற்றுத் தொடர்ச்சியை, கொள்கை அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும். இடையில் அவர்கள் எம்ஜிஆர் எதிர்ப்பு, ஜெயலலிதா எதிர்ப்பு, ஆட்சி அதிகார மாற்றம் நோக்கிய பயணம் என்று சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இதனால் தற்போது ஒரு தத்துவார்த்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடமையில் இருந்து வழுவியதால் உருவானதே இந்த நெருக்கடி. கடந்த காலத்தின் இலட்சியங்கள், வரலாறுகள், சாதனைகள் ஆகியவற்றை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வதன் மூலம் தன்னை உயிர்ப்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று திமுக உள்ளது. இதன்மூலமாகவே வலிமையான அடித்தளத்தை உருவாக்க முடியும்.
புதிய இளம் தலைமுறை தமிழக அரசியலில் தலையெடுத்து உள்ளது. அவர்களுக்கு திமுக மீது ஈர்ப்பு இருப்பதாகச் சொல்லமுடிய வில்லை. இதற்கான கட்டமைப்புகளை செயலூக்கத்துடன் உருவாக்கவேண்டும். கடந்த கால மேடை அலங்கார மொழி, அடுக்குமொழி, இலக்கியப் பெருமைகளைப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும். சுருக்கமான, அதே சமயம் ஆழமான தரவுகளுடன் பேசும் மேடைப்பேச்சே ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
திமுகவின் பாணி என்பது மேடையில் கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் அரசியல் என்பதாகப் போய்கொண்டிருக்கிறது. அதுவும் செய்யவேண்டியதுதான் அதே சமயம் தேர்தல் அரசியலில் இறங்காமல் போராடும் சமூக இயக்கங்களையும் அரவணைக்கவேண்டும்.
திமுக பின்பற்றி வந்த தேர்தல் உத்திகள் அண்மைக்காலமாக பலன் அளிக்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். இது அவர்கள் இனியும் தற்காப்பு ஆட்டம் ஆடுவதற்கான களம் அல்ல. எதிர்த்தாட வேண்டிய களம். தேர்தல் வெற்றியையும் வாக்குகளையும் கவனத்தில் கொள்வதை விட கட்சின் அடிப்படையை தக்க வைக்கும் ஆட்டமே அவர்களுக்குப் பலன் தரும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் மேற்கொண்ட மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் அவருக்கு பலமூட்டுவதாகவே அமைந்தது. மீண்டும் அப்படியொரு சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளும்போது கட்சியின் இளமையான, வரலாற்று உணர்வு கொண்ட முகங்களை உடன் அழைத்துச் செல்லவேண்டும். சமூக, மக்கள் இயக்கங்களைச் சார்ந்தவர்களுடன் உறவுப்பாலத்துக்காகவும் அதைப் பயன்படுத்தவேண்டும்
ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் திமுகவுக்குப் பாதிப்பில்லை என்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவு ஒன்றை நான் சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற குழப்பும் சர்வேக்களை நம்பாமல் களத்தில் நிற்கவேண்டிய நேரம் இதுவே ஆகும்.
மார்ச், 2018.